சமூக ஊடகங்களை கையாளும் போது கூடிய அவதானம் தேவை.

Care Before you Share
சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முந்தைய காலங்களில் ஒரு செய்தி மக்களிடம் சென்றடைய வேண்டுமென்றால், அதற்கான உரிய ஊடகங்களாக தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்கள் மட்டுமே காணக்கூடியதாக இருந்தன. அப்போது ஒரு செய்தி பிரசுரிக்கப்படவேண்டும் அல்லது ஒளிபரப்பப்படவேண்டும் என்றால், அந்தச் செய்தி பிராந்திய ஊடகவியலாளர்கள் மூலம் ஊடக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டியிருந்தது.

அவ்வாறு அனுப்பப்படும் செய்திகளை தலைமை அலுவலகத்தில் இருக்கும் பிரதான செய்தி ஆசிரியர்கள், உதவிச்செய்தி ஆசிரியர்கள் மீண்டும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்பு அது பிரசுரிக்கப்படும் அல்லது வானொலியில் ஒலிபரப்பப்படும்/தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிலைகாணப்பட்டது.

இந்த வகை செயற்பாடு காரணமாக, பொய்யான அல்லது பிழையான தகவல்கள் மக்களிடம் சென்றடைவது மிகக் குறைவாகவே இருந்தது.

ஆனால் நிகழ்காலத்தில் சமூக ஊடகத்தின் பயன்பாடு மிக அதிகரித்திருப்பதால், சமூக ஊடகப் பயனாளர்கள் தாங்களே ஊடகவியலாளர்கள் என நினைத்து, தங்களுக்கு கிடைக்கும் செய்திகளை எந்தவித உறுதிப்படுத்தலும் இல்லாமல் உடனடியாக பகிரும் நிலை அதிகரித்துள்ளது.

இத்தகைய நிலைமை பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை திசைதிருப்புகின்ற நிலை அதிகரித்து வருகின்ற விடயம் கவலைக்குரியதாகும் .

இதற்கு உதாரணமாக கடைசி வாரத்தில் இரண்டு விடயங்களை காணக்கூடியதாக உள்ளது.

1.முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் காலமானதாக பரப்பப்பட்ட தவறான செய்தி.

2.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் காலமானதாக கூறப்பட்ட பொய்யான செய்தி.

இந்த இரண்டு செய்திகள், குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்குள், நூற்றுக்கணக்கான சமூக ஊடக பாவனையாளர்களால் பரிமாறப்பட்டன. ஆனால் இரண்டும் பொய்யான செய்திகளாக இருந்தன.

ஒருவர் ஊடகவியலாளர் ஆக வேண்டும் என நினைத்தால், அந்த கனவை நிறைவேற்ற பல்வேறு கற்கை நெறிகளை கற்று, நடைமுறை ரீதியான களப்பயிற்சிகளில் ஈடுபட்டு அனுபவங்களைப் பெற வேண்டும்.

இன்றைய நிலைமையில், ஒருவர் Facebook கணக்கு அல்லது YouTube சேனல் ஆரம்பித்தாலே, தாங்களும் ஊடகவியலாளர் என்ற தவறான எண்ணத்துடன், எந்தவித உறுதிப்படுத்தலுமின்றி தகவல்களை பகிரும் நிலை காணப்படுகிறது.

கவலையான விடயம் என்ன வென்றால் சில ஊடகவியலாளர்கள் கூட அவசரமாக செய்திகளை வழங்க வேண்டும் என்பதற்காக உறுதிப்படுத்தாமல் செய்திகளை பகிர்வதாகும்.

இத்தகைய நிலைப்பாடு, உண்மையான செய்திகள் மக்களிடம் சென்றடைவதில் ஒரு முக்கியமான தடையாகவும் சவாலாகவும் உள்ளது.

எனவே, தங்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும், அதை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிரக் கூடாது. பொய்யான தகவல்களை பரப்புவதை நாம் முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நன்றி.
மனாஸ் மகீன்
நிறைவேற்று பணிப்பாளர்,
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top