போதைப்பொருள் இல்லாத பிரகாசமான எதிர்காலம் : ஜனாதிபதியின் திட்டம் காலோசிதமானது – மட்டு. எம்பி கந்தசாமி பிரபு
போதைப்பொருள் ஒழிப்பிற்கு ‘முழு நாடுமே ஒன்றாக’ – ஜனாதிபதி தலைமையில் தேசிய செயற்றிட்டம் ஆரம்பம்
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையையும் அதன்மூலம் ஏற்படும் சமூகச் சீரழிவுகளையும் முற்றாக ஒழிக்கும் நோக்குடன் அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்றிட்டம் நேற்று (அக்டோபர் 30, 2025) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இம்மாபெரும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கொழும்பில் இடம்பெற்றன.
இச்செயற்றிட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இதனை வரவேற்றுள்ளனர்.
குறிப்பாக, போதைப்பொருளின் பிடியில் சிக்கி இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருவதை நேரில் காணும் மட்டக்களப்பு மக்கள், அரசாங்கத்தின் இந்த உறுதியான நடவடிக்கையை பெரிதும் பாராட்டுகின்றனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு “எமது பிராந்தியத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் மிகப்பெரிய சவாலாக போதைப்பொருள் மாறியுள்ளது. இதனை வேரோடு அழிக்க அரசாங்கம் எடுத்துள்ள இந்த ‘முழு நாடுமே ஒன்றாக’ முயற்சி மிகவும் காலோசிதமானது.
சட்ட அமுலாக்கப்பிரிவினருடன் இணைந்து பொதுமக்களாகிய நாமும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதன் மூலமே போதைப்பொருள் இல்லாத ஒரு பிரகாசமான எதிர்காலத்தை எமது பிள்ளைகளுக்கு வழங்க முடியும்” எனத் தெரிவித்தார்.
பாதுகாப்புப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுக்கும் இந்த நடவடிக்கையின் கீழ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை முற்றாக முடக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் ஒத்துழைப்பைப்பெற்று, இத்தீமையை நாட்டிலிருந்து அகற்றுவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

