அரசாங்கம் முன்னெடுத்து வரும் போதையொழிப்பு மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.

அரசாங்கத்தின் போதையொழிப்பு மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு முயற்சிகள் நாட்டின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையளிக்கிறது : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி பாராட்டுகிறது.

செய்தியாளர்

(நூருல் ஹுதா உமர்)

உலகின் அழகிய நாடுகளில் ஒன்றான சகல வளமும் மிக்க எமது தேசம் அபிவிருத்தியடையாமல் இருந்த காரணங்களில் லஞ்சம், ஊழலும், போதைப்பொருள் பாவனையும் அதீத செல்வாக்கு செலுத்தியது.
இலங்கையில் போதைப்பொருள் பரவல், சமூகத்தின் அடித்தளங்களை அசைத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சமூக ஆபத்தாக மாறியுள்ள இக்காலகட்டத்தில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உறுதியான மற்றும் துணிவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. நாட்டின் எதிர்கால தலைமுறையை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த போதையொழிப்பு தேசியப் போராட்டம் மக்களின் வாழ்வில் நம்பிக்கையையும் நெறிமுறையையும் மீண்டும் நிலைநாட்டும் முயற்சியாக ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி பாராட்டுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாடு முழுவதும் சட்டம் அமல்படுத்தும் பாதுகாப்பு படையின் அதிகாரிகள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள், மத ஸ்தாபனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் போதைப்பொருள் வலையமைப்புகளை முறியடிக்கும் நடவடிக்கைகள் நாட்டில் பலனளித்து வருகின்றன. குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்வி வழி நடவடிக்கைகள் மகிழ்ச்சிகரமான முன்னேற்றமாகும்.

மேலும், லஞ்சம் மற்றும் ஊழலை முறியடிக்க அரசாங்கம் எடுத்துள்ள கடுமையான சட்ட நடவடிக்கைகள் நாட்டின் நிர்வாக நெறிமுறைகளையும் பொது நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் முக்கியமான கட்டமாக அமைகிறது. லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் நீதித்துறைக்கும் கொடுக்கப்பட்ட சுதந்திரம் மற்றும் அதிகார விரிவாக்கம் மற்றும் வெளிப்படையான விசாரணை நடைமுறைகள், மக்கள் மத்தியில் நீதி மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளன.

ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி, அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கின்றது. நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடிப்படை அம்சமான நேர்மை, ஒழுக்கம், சட்டத்தின் மேலாதிக்கம் ஆகியவற்றை நிலைநாட்டுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் எனக் கட்சி வலியுறுத்துகிறது. அதேவேளை, போதையொழிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் தற்காலிக பிரச்சாரமாக அல்லாமல், நீடித்த கொள்கை மற்றும் கல்வி அடிப்படையிலான தேசிய இயக்கமாக தொடர வேண்டும் என்பதையும் கட்சி வலியுறுத்துகிறது.

ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி மக்கள் நலனுக்காக வெளிப்படையான ஆட்சியையும் ஒழுக்கநெறி கொண்ட அரசியலையும் முன்னெடுக்கும் எந்த அரசாங்க முயற்சிக்கும் எப்போதும் தனது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top