


யாழ். வேலணையில் ஜனாதிபதி பங்கேற்ற மாகாண தைப்பொங்கல் விழா: பாரம்பரிய முறைப்படி வரவேற்பு
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட பொங்கல் விழா இன்று காலை யாழ்ப்பாணம், வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தமிழர்களின் பாரம்பரிய கலாசார முறைப்படி மாலை அணிவிக்கப்பட்டு, பூரண கும்ப மரியாதையுடன் மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த விசேட இடத்தில் மண்பானையில் அரிசியிட்டு, ஜனாதிபதி அநுர பொங்கல் நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் நடைபெறும் மிகப்பெரிய கலாசார நிகழ்வு இதுவாகும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
நிகழ்வின் ஒரு பகுதியாகப் பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், காவடியாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
வேலணை மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுப்பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான பொதுமக்கள் இம் மாகாணப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
