

முதியோர்களுக்கான ஓய்வு வசதிகள் மேம்பாடு – மௌலானா பூங்காவில் கூடாரம் — தவிசாளர் நழீம் அவர்களினால் திறந்து வைப்பு
ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள மௌலானா பூங்காவில், தினமும் மாலை நேரங்களில் முதியோர்கள் ஒன்றுகூடி தங்களது ஓய்வு நேரங்களை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில், ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்கள், நகரசபைக்கு சொந்தமான இப்பூங்காவை பார்வையிட வந்தபோது, அங்கு கூடிவந்த முதியோர்களினால் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
அதற்கமைவாக, முதியோர்கள் தங்களது ஓய்வு நேரத்தை மேலும் சுகமாகவும் பயனுள்ளதாகவும் கழிக்கக் கூடிய வகையில், அழகிய கூடாரம் அமைக்கப்பட்டு, அது உத்தியோகபூர்வமாக முதியோர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (01) புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்கள், கௌரவ உறுப்பினர்கள் எம்.ஐ.ஏ. நாஸர், எஸ்.எம். ஜப்பார், ஏ. சுபைதா உம்மா மற்றும் பலரும், அதேபோல் முதியோர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வின் போது, முதியோர்களின் ஓய்வு நேரம் திருப்திகரமாக அமைய வேண்டும் என்பதற்காக, தினசரி மூன்று வகையான பத்திரிகைகள் வழங்கப்படும் என்றும் தவிசாளர் அவர்கள் அறிவித்தார்.
அத்துடன், முதியோர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் முகமாக இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும், முதியோர் சங்கத்தின் சார்பில் உரையாற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ. மஜீட் அவர்கள், முதியோர்களின் ஓய்வு நேரத்தின் முக்கியத்துவம், பரஸ்பர ஒற்றுமை மற்றும் சமூக உறவுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
