சம்மாந்துறை நீச்சல் தடாக சீரமைப்பு பணிகள் விரைவில்.

நீச்சலை ஊக்குவிக்க வாய்ப்பு

நீண்டகாலமாக பழுதடைந்த நீச்சல் தடாகம் : விரைவில் சீரமைப்புப்பணிகள் ஆரம்பம்

(நூருல் ஹுதா உமர்)

சம்மாந்துறை விளையாட்டுத்தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், அதனை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே நீண்டநாளாக நிலவி வந்த கவலைகளை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் குழு கடந்த 06.04.2026 அன்று ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தது.

அப்போது, குறித்த விளையாட்டுத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக உறுப்பினர்கள் கவனஞ்செலுத்தினர். குறிப்பாக, நீச்சல் தடாகத்தின் சேதமடைந்த நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இளம் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும், பிரதேச விளையாட்டு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தடாகத்தை உடனடியாக சீரமைப்பது அவசியம் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, பிரதேச சபை தவிசாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நீச்சல் தடாகத்தை விரைவாக சீரமைக்கும் பணிகளை ஆரம்பிக்கத்தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்த பின்னர், சம்மாந்துறை பகுதியில் நீச்சல் விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும், இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த சிறந்த சூழல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கள விஜயத்தில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், முஹம்மட் ஆசிக், முஹம்மட் ஹாலீத், முஹம்மது ரிஸ்விகான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top