


நெருக்கடிமிக்க சூழலிலும் நலிவுற்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசு தீவிரம் – கந்தசாமி பிரபு எம்பி
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச ரீதியில் பிற நாடுகளுடன் வலுவான இராஜதந்திர உறவுகளுடன் செயற்படுவதாகவும் நெருக்கடிமிக்க சூழ்நிலையிலும் சாதாரண நலிவுற்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மாத்திரம் இவ்வருடம் 115.17 மில்லியன் ரூபா செலவில் 136 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இதனைத்தெரிவித்தார்.
கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வவுணதீவு, வெல்லாவெளி போன்ற மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் “சொந்தமாக இருக்க ஒரு இடம் அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் இவ்வீடமைக்கும் பணிகள் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைவாக கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புனானை கிழக்கு கேணிநகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கும் நிகழ்வு நேற்று வாகரை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.ஹைத்தர் அலி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் T.சுபாஸ்கரன், வாகரை பிரதேச செயலாளர் K.அமலினி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச அமைப்பாளரும் பிரஜா சக்தி அமைப்பின் தவிசாளர் MACM.நியாஸ் ஹாஜியார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அரச அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
