ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற உரையொன்றில் அவர் கூறுகையில், ஈரானின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில் ஈரானை குறிவைத்து எந்தவிதமான தாக்குதலும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும், போர் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மூன்று நிபந்தனைகளும் ஏற்கப்பட்டால், ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தில், ஈரானுடனான மோதல் விரைவில் முடிவுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகவும், ஈரானில் தாக்குவதற்கான முக்கிய இலக்குகள் இனி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால், சர்வதேச அளவில் இந்த மோதல் விரைவில் சமாதான பாதைக்கு செல்லும் வாய்ப்பு குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பதற்றத்தை குறைக்கும் வகையில் பல நாடுகள் பேச்சுவார்த்தை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இந்த மோதல் குறித்து சர்வதேச மட்டத்தில் புதிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
