முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்து செய்தி.

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனைகளைப் பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவர்களின் கடின உழைப்பின் பலன், அதனுடன் இணைந்து பாடசாலை சமூகத்தின் அர்ப்பணிப்பு, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அரிய வழிகாட்டல், குறிப்பாக பெற்றோர்களின் அளவற்ற தியாகம் மற்றும் ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெற்றியை பெருமையுடன் நினைவுகூர்கிறேன்.

கல்வியின் மூலம் அறிவார்ந்த மற்றும் வலுவான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நான் ஆரம்பித்த பயணம் இன்று இவ்வாறான பெறுபேறுகள் மூலம் பலனளித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது.

அதேவேளை, எதிர்பார்த்த பெறுபேறுகளை பெற முடியாத மாணவர்களே, இது உங்கள் முடிவு அல்ல. வாழ்க்கை இன்னும் பல வாய்ப்புகளை வைத்திருக்கிறது.
இன்று ஏற்பட்ட இந்த சிறிய தடையை, நாளைய பெரிய வெற்றியாக மாற்றும் திறன் உங்களிடம் இருக்கிறது.நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.உங்கள் ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் சமூகத்திற்குப் பயனுள்ள நபர்களாக உயர வேண்டும் என்பதே என் ஆழ்ந்த விருப்பமாகும்.

மேலும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பெருமையும், நம் சமூகத்தின் முன்னேற்றத்தின் அடையாளமுமாக க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற மொஹமட் சுபைதீன் மொஹமட் பர்தானிற்கு எனது இதயங்கனிந்த பாராட்டுகள்.

உங்கள் அனைவருக்கும் தொடர்ந்த வெற்றிகளும் வளமான எதிர்காலமும் அமைய என் இதயப்பூர்வ வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்!

M.S.S. அமீர் அலி
முன்னாள் இராஜாங்க அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top