ஜாஹிர் ஜே.பி.வெற்றிக்கிண்ணம் மாளிகா பிங்க் அணி வசமானது.

ஜாஹீர் ஜே.பி வெற்றிக்கிண்ண இறுதியாட்டம் : மாளிகா பிங்க் அணி சம்பியன்

(நூருல் ஹுதா உமர்)

காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினரும், பிரதேச சமூக சேவகருமான ஏ.எம். ஜாஹீரின் பெயரில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்ற ஜாஹீர் ஜே.பி வெற்றிக்கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதியாட்டத்தில் மாளிகா பிங்க் அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவாகியது.

மாளிகா விளையாட்டுக்கழகத்தின் நான்காவது ஆண்டை முன்னிட்டு கழகத் தலைவர் எஸ். பஸ்லூன் தலைமையில் சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் மிகவும் பரபரப்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆரம்பம் முதலே சிறப்பான பந்துவீச்சும், துல்லியமான துடுப்பாட்டமும் மூலம் மாளிகா பிங்க் அணி சகல ஓவர்களையும் எதிர்கொண்டு ஐந்து விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களை பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. மாளிகா பிங்க் அணியும் கடைசி வரை போராடிய போதிலும், மாளிகா பிங்க் அணியின் ஒருங்கிணைந்த ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் சகல ஓவர்களையும் எதிர்கொண்டு ஆறு விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களை மட்டுமே பெற்று 17 ஓட்டங்களினால் மாளிகா ப்ளூ அணி தோல்வியை தழுவியது.

போட்டியின் சிறந்த வீரராக மாளிகா பிங்க் அணியின் வீரர் என்.எம்.சபீர் தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிவில் சம்பியன் அணிக்கும் மற்றும் போட்டியில் பிரகாசித்தவர்களுக்குமான வெற்றிக்கிண்ணங்களை பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர், கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்த அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.நூருல் ஹுதா, ஜாஹீர் பௌண்டஷன் சிரேஷ்ட ஆலோசகர் பி சம்சுதீன், ஜாஹீர் பௌண்டஷன் நிர்வாகிகள் உட்பட கழக முக்கியஸ்தர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல்வேறு விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டுகளித்தனர். தொடர் முழுவதும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இவ்வாறு, இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடர், விளையாட்டு உணர்வை மேலும் ஊக்குவித்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top