ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (11) பிற்பகல் கொழும்பு மால் வீதியிலுள்ள கட்சியின் அரசியல் அலுவலகத்தில், முன்னாள் ஜனாதிபதியும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் கலந்து கொண்டதுடன், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் கட்சி எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பு கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் தொடர்பாக பல முக்கியமான யோசனைகளும் முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன.
அதேவேளை, ஏனைய அரசியல் கட்சிகள், சமூக சக்திகள் மற்றும் அமைப்புகளுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படுவது என்பது தொடர்பிலும் செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கால அரசியல் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரல, கட்சியின் ஒழுக்க விதிமுறைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழுவுக்கு அறிவித்தார்.
கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, கட்சியின் அமைப்புகளை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள், சக்திகள், அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான தீர்மானங்கள் இக்கூட்டத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்ததாக தெரிவித்தார்.
