
நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் தொடர்ந்தும் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையில் இருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ந்து இடைநிறுத்தம் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடமிருந்து அவசர அறிவித்தல்
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 2026.06.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி முதல் நிலவி வரும் சீரற்ற வானிலை நிலவரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதன் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து விசேட விளக்கமளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த பின்வருமாறு வலியுறுத்தினார் :
“கடந்த 08ஆம் திகதி முதல் நாம் அறிவித்ததைப் போன்று, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை மிக அதிக மட்டத்தில் காணப்படுவதுடன், கடல் அலைகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும். இதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் சிறிய மீன்பிடிப் படகுகள் பாதுகாப்பாகத் தொழிலில் ஈடுபடுவதற்கு எந்த வகையிலும் பொருத்தமான சூழல் அல்ல. எனவே, மறு அறிவித்தல் வரை அந்தப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு நாம் மீண்டும் வலியறுத்துகிறோம்.”
அதேபோன்று, கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களும் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டுகிறார்.
குறித்த பகுதிகளிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை என்ற போதிலும், கடலுக்குச் செல்வதற்கு முன்னர் நிலவும் காற்றின் வேகம் மற்றும் அலையின் தன்மை குறித்து தனிப்பட்ட ரீதியில் அவதானம் செலுத்துமாறும், பாதுகாப்பாகத் தொழில் செய்யக்கூடிய நிலைமை காணப்படுமாயின் மாத்திரம் கடலுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
உயிர் காக்கும் அங்கிகளை (Life Jackets) அணிவது கட்டாயமாகும்: நாட்டைச் சூழவுள்ள எந்தவொரு கடற்பிராந்தியங்களிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு மீனவரும், தரையிலிருந்து புறப்படுவது முதல் தொழிலில் ஈடுபடும் காலம் மற்றும் மீண்டும் கரைக்கு திரும்பும் வரையான பயணக்காலம் முழுவதும் உயிர் காக்கும் அங்கிகளை அணிந்திருப்பது கட்டாயமாகும் என கடற்றொழில் திணைக்களம் வலியுறுத்துகிறது. ஏதேனும் அவசர விபத்து ஏற்படும் போது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முதன்மையான வழிமுறை இது என்பதையும் பணிப்பாளர் நாயகம் மீண்டும் நினைவூட்டுகிறார்.
கடற்றொழில் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களங்களினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் குறித்து மிகுந்த அவதானம் செலுத்தி, பொறுப்புடன் செயற்படுமாறு ஒட்டுமொத்த மீனவ சமூகத்திடமும் தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
