அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி செயலமர்வு.

இலங்கை பத்திரிகை பேரவை மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்களுக்கான
ஒரு நாள் பயிற்சி செயலமர்வு இன்று (25) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரமாராய்ச்சி தலைமையில் ஆரம்பமான இந்த செயலமர்வில், ஊடகவியலாளர்களின் தொழில்முறை செயற்பாடுகள், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு, ஊடகத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வின்போது, சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஜெகத் லியானாராய்ச்சி, ஊடகவியலாளர்களின் தொழில்முறை நடைமுறைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு தொடர்பில் விளக்கமளித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர்களான உபேந்திரா கேரத் மற்றும் கில்மி முஹம்மட் ஆகியோர், நவீன ஊடகப் போக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், ஊடகத்துறையுடன் தொடர்புடைய சட்டப் பின்னணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துரைகள் மற்றும் விளக்கங்களை வழங்கினர்.

பயிற்சி செயலமர்வின் இறுதியில், பங்கேற்ற ஊடகவியலாளர்களுக்கு இலங்கை பத்திரிகை பேரவையினால் நற்சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top