மத்திய கிழக்கில் தொடரும் போரினால் ஏர் இந்தியா விமானக் கட்டணங்கள் அதிகரிப்பு.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து, ஏர் இந்தியா தனது விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

விமான எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு மூன்று கட்டங்களாக அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மார்ச் 12 முதல் அமுலுக்கு வரும் முதல் கட்டத்தில், உள்நாட்டுப் பயணங்கள் மற்றும் சார்க் நாடுகளுக்கான பயணங்களுக்கு 399 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணங்களுக்கு 10 அமெரிக்க டாலர்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 40 டாலரிலிருந்து 60 டாலராகவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 60 டாலரிலிருந்து 90 டாலராகவும் கட்டணம் உயர்வடைய இருக்கிறது .

மார்ச் 18 முதல் அமுலுக்கு வரும் இரண்டாம் நிலையில், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கான கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும். ஹாங்காங், ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட தூரக் கிழக்கு நாடுகளுக்கான உயர்வு மூன்றாவது நிலையில் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானச் செயல்பாட்டு செலவில் 40 சதவீதத்திற்கும் மேலாகப் பங்களிக்கும் எரிபொருள் விலை மார்ச் தொடக்கத்தில் இருந்து பெருமளவு அதிகரித்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை போன்ற பெரும் நகரங்களில் விதிக்கப்படும் கலால் வரி மற்றும் வாட் வரி காரணமாக இந்தச் சுமை மேலும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த கூடுதல் கட்டணத்தை வசூலிக்காவிட்டால் செயல்பாட்டுச் செலவை ஈடுகட்ட முடியாமல் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டியிருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று ஏர் இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஏற்கனவே டிக்கெட்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த புதிய கட்டண உயர்வு பொருந்தாது. ஆனால், அவர்கள் பயணத் தேதி அல்லது வழித்தடத்தை மாற்ற முற்பட்டால் புதிய கட்டண விகிதங்கள் வசூலிக்கப்படும். வளைகுடா பகுதியில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த விலை உயர்வு சர்வதேசப் பயணிகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top