ஓட்டமாவடியில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பும் இப்தார் நிகழ்வு.

ஓட்டமாவடியில் இன ஐக்கிய Youth Ling இளைஞர், யுவதிகளின் விஷேட இப்தார் நிகழ்வு.

இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய, சர்வதேச “யூத் லிங்”(Youth ling) வேலைத்திட்டத்தின்
கீழ் நாடு பூராகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட வருகிறது.

இதற்கமைவாக மூவின இளைஞர், யுவதிகளையும் ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விஷேட நிகழ்வு ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையத்தில்  திங்கட்கிழமை (9) அன்று நடைபெற்றது.

இதன்போது பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் இன நல்லிணக்கத்தைக் கட்டியொழுப்புதல், சமயங்களுக்கு இடையிலான வித்தியாசங்களைப்புரிந்து கொண்டு ஒவ்வொருவரினதும் மத கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளித்தல் போன்ற செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இளந்தலைமுறையினருக்கு மத்தியில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் அனுராதபுர மாவட்டத்தின் தம்புத்தேகம, மட்டக்களப்பு செங்கலடி, ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களைச்சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் எனப் பல்வேறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 150க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளும் சமூக நலச்செயற்பாட்டாளர்களும் இதன் போது பங்கேற்று இருந்தனர்.

ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியும், இளைஞர் சேவை அதிகாரியுமான ஏ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி, ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ்,
முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைட் நளீமி, தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.சீ நியாஸ் ஹாஜியார் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கல்குடா கிளையின் உப தலைவர் ஏ.பி.எம்.முஸ்தபா (இஸ்லாஹி) FPA அமைப்பின் மாவட்ட முகாமையாளர் எஸ்.எச்.எம்.இம்தியாஸ்
உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் இன ஐக்கியம் மற்றும் சக வாழ்வை வலியுறுத்தும் வகையில் “சகோதரத்துவமும் புரிந்துணர்வும்” எனும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்டவிரிவுரையாளர் எம்.ரி.எம். றிஸ்வி( மஜீதி) உரையாற்றினார்.

தமிழ், சிங்கள இளைஞர், யுவதிகள் தம் வாழ்நாளில் முஸ்லிம்களின் புனிதக்கடமையான நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டமை மற்றும் அவர்களின் உணவு, கலாசார முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தாம் புரிந்து கொள்வதற்கு ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்திருந்ததாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இந்நாட்டின் இளைஞர்களாக தாம் ஒன்றிணைந்து செயற்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தமது அனுபவப்பகிர்வின் மூலம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top