
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா.அதிபர் சுஜித் வெதமுல்ல கல்முனை பொலிஸ் ஆலோசனை குழுவுடன் சந்திப்பு
இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்ததற்காக, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா.அதிபர் சுஜித் வெதமுல்ல அவர்களுக்கு கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி மற்றும் குழு உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா.அதிபர் குழு உறுப்பினர்களுடன் சிறு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். அவர், இலங்கை பொலிஸ் மேலாண்மை ஆலோசனை மற்றும் வழிநடத்தலுக்காக, ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் சமூக பொலிஸ் பிரிவுடன் ஆலோசனைக்குழுக்கள் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் போது, போதைப்பொருள் பாவனை, வீடு உடைப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு, குற்றச்செயல்களை உடனடியாக தடுக்கும் வழிமுறைகள் மற்றும் சமூக பொலிசார்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், போக்குவரத்து ஒழுங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இரவு நேர கண்காணிப்பு, குற்றவாளிகளை அடையாளம் காண்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதும், பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் மேம்படுத்தப்படும் என்பதும் கலந்துரையாடலில் உறுதிப்படுத்தப்பட்டது.
இதில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி, சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொலிஸ் ஆலோசனை குழுக்கள் ஊடாக, குற்றச்செயல்களை குறைத்து, சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை இலங்கை பொலிஸ் முன்னெடுத்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
