வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் இப்தார் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு.
வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மேலும் 08 பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு இன்று (08) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நம்பிக்கையாளர் சபையின் உபத் தலைவர் அல்ஹாஜ் ஏ. ஐயூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ரஹ்மதுல்லாஹ் (பலாஹி) அவர்கள் தமது பல வருடங்களாக ஆற்றிவரும் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் வரவேற்புரையை உப செயலாளர் ஏ. எல். ஏ. ரஹீஸ் (நளீமி) அவர்கள் வழங்கினார். விசேட உரையை பிறைந்துரைச்சேனை நூரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் அப்துல் மஜீத் மெளலவி அவர்கள் நிகழ்த்தினார். மேலும் சிறப்புரையை மெளலவி எம்.ஐ.எம். ரிஸ்வான் (நஹ்ஜி) அவர்கள் வழங்கியதுடன், துஆப் பிரார்த்தனையை வாழைச்சேனை ஹைராத் ஜும்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் எம். முபாறக் மெளலவி அவர்கள் நடத்தினார்.
1994 ஆம் ஆண்டு முதல் வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராக பணியாற்றி வரும் எம்.ஏ.எம். ரஹ்மதுல்லாஹ் (பலாஹி) அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்பு சேவையைப் பாராட்டி இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வாழைச்சேனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அதிபர்கள் மற்றும் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், கல்விமான்கள், மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


