

கல்குடா பிரீமியர் லீக் பருவகால கிரிக்கெட் திருவிழா பிரமாண்டமாக ஆரம்பம்
கல்குடா பிராந்தியத்தின் விளையாட்டுத்துறையில் மிக முக்கியமான நிகழ்வாகக்கருதப்படும் “கல்குடா பிரீமியர் லீக் – 2026” (KPL Season-09) கிரிக்கெட் தொடரின் ஆரம்ப விழா நேற்று 25.04.2026ம் திகதி சனிக்கிழமை மதியம் 1.00 மணிக்கு ஓட்டமாவடி அமீர் அலி பொதுமைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் (NSSC) தலைவர் ZM.றிஹாஸ் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன் ஹாஜியார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.எஃப்.எம்.ஜஃபர், வாழைச்சேனை வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.றபீக், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.அலி அன்சார் மற்றும் அனுசரணையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேசியக்கொடியுடன் நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம் (NSSC) மற்றும் KPL தொடருக்கான உத்தியோகபூர்வக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு விளையாட்டுத்தொடர் அதிதிகளால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போட்டிகள் நேர்மையாகவும், நடுநிலையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், நடுவர்கள் மற்றும் பங்கு பெறும் அணிகளின் தலைவர்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன், தொடரின் ஆரம்பத்தைக்குறிக்கும் வகையில் விசேட நினைவுச்சின்னத்தில் அதிதிகள் கையொப்பமிட்டனர்.
இம்முறை வழங்கப்படவுள்ள கண்கவர் KPL சாம்பியன் கிண்ணம் உத்தியோகபூர்வமாகத்திரைநீக்கம் செய்யப்பட்டது.
ஆரம்ப விழாவைத்தொடர்ந்து தொடரின் முதலாவது லீக் போட்டி பலம் வாய்ந்த Echo Sports Club மற்றும் Kalkudah Challengers Sports Club ஆகிய இரு அணிகளுக்கிடையே கோலாகலமாகத் தொடங்கியது.
கல்குடா பிராந்தியத்தின் இளம் வீரர்களின் விளையாட்டுத்திறமைகளை வெளிக்கொணரும் களமாக அமைந்துள்ள இத்தொடரைக்காண பெருமளவிலான விளையாட்டு வீரர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் கிரிக்கெட் இரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.
வாழைச்சேனை மற்றும் அதனைச்சூழவுள்ள கிராமங்களைச்சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் இந்த 9-வது பருவகால KPL தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
