திருகோணமலையில் “ஒன்றாய் எழுவோம்” (Together We Rise) மாகாணத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்.

இலங்கையின் சிவில் சமூக அமைப்புகளை (CSOs) அபிவிருத்தி, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் பலம் வாய்ந்த பங்குதாரர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட “ஒன்றாய் எழுவோம்” (Together We Rise) மாகாணத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நேற்று (23) திருகோணமலையில் அமைந்துள்ள JKAB ஹோட்டலில் நடைபெற்றது.

இதன் போது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள சமூக சேவைகள் அமைப்பை உத்தியோகபூர்வமாக ஒன்றிணைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியுடனும், வேர்ல்ட் விஷன் ஜேர்மனியின் (World Vision Germany) ஆதரவுடனும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதனை இலங்கையில் World Vision லங்கா மற்றும் SAFE Foundation ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.

அடிமட்ட சமூக அமைப்புகளின் திறன்களை உயர்த்தி, நிலையான சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்துதல், பெண்கள் தலைமைத்துவ அமைப்புகள், இளைஞர் குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளின் (OPDs) பங்களிப்பை அதிகரித்தல், உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை மூலம், சாதாரண மக்களின் குரல்கள் கேட்கப்படுவதையும் அவர்கள் வலுவூட்டப்படுவதையும் உறுதிசெய்தல் போன்றன இத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

2026 முதல் 2028 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் ஆரம்ப விழாவில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
ஜே.எஸ். அருள்ராஜ், உள்ளிட்ட மாகாண, மாவட்ட மட்ட அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது, திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் இது எவ்வாறு இணைகிறது என்பது குறித்து World Vision Lanka மற்றும் SAFE Foundation பிரதிநிதிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திட்டத்தின் வெற்றிக்கான பங்கேற்பாளர்களின் கருத்துப் பரிமாற்றங்களுடன் நிகழ்வு சிறப்பாய் நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top