- .



காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளின் இரத்த வங்கியின் தேவையை பூர்த்தி செய்வதற்காக காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரை மினா மண்டபத்தில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
‘உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்’ என்னும் தொனிப்பொருளின் கீழ் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எச்.எஸ்.ஹமீட் தலைமையில் நடாத்தப்பட்ட இந்த முகாமில் இருநூற்றுக்கு மேற்பட்ட குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
இவ் இரத்ததான நிகழ்வில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம். ஜாபிர், இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் அலீமா ரஹ்மான், வைத்தியர் நித்தியா, வைத்தியர் சஞ்சீதா மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.றமீஸ் (ஜமாலி), இரத்த கொடையாளர்கள் சம்மேளன பிரநிதிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் 4வது இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட ஆண் பெண் குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி மற்றும் குருதி கொடையாளர்கள் சம்மேளனம் ஆகியன ஆற்றிவரும் மனிதநேயமிக்க பணிகளை பாராட்டி இதன் போது நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு 2500க்கு மேற்பட்ட ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துள்ளதுடன் இன மத வேறுபாடுகளுக்கப்பால் பல்வேறு சமூக பணிகளையும் ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
