
“வளமான நாடு அழகான வாழ்வு – புனருதயே புரவர ‘புத்துயிர்க்கும் புது நகரம்'” எனும் தொனிப்பொருளின் கீழ், பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கைக்கு இணங்க, காத்தான்குடி நகர சபையினால் உள்ளுராட்சி வாரம் – 2026 எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மிகச் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பான ஆரம்பக் கட்டக் கலந்துரையாடல் இன்று (08.09.2026) செவ்வாய்க்கிழமை, காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நகர முதல்வர் SHM அஸ்பர் (JP)அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நகர சபையுடன் இணைந்து சேவையாற்றும் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, காத்தான்குடி நகர சபையினால் பொதுமக்களுக்குச் சேவையாற்றும் வகையிலும் நகரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து நகர முதல்வர் இதன்போது விரிவாகத் தெளிவுபடுத்தியதுடன் குறித்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வகிபாகம் மற்றும் அவற்றின் ஒத்துழைப்புகள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து ஆழமாக ஆராயப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
குறித்த ஒரு வார காலத்தில் துப்புரவுப் பணிகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
காத்தான்குடி நகரத்தை மேலும் தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றுவதற்காக அனைத்துத் தரப்பினரதும் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் இந்த உள்ளுராட்சி வாரம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
