

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மோதலில் காயமடைந்து, தற்போது இலங்கை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று பிற்பகல் (07) இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
அதன்போது, அமைச்சர், தேசிய வைத்தியசாலையின் 72 மற்றும் 79-வது விடுதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுவரும் சிறைச்சாலை அதிகாரிகளையும் கைதிகளையும் நேரில் சந்தித்து, அவர்களின் நலம் விசாரித்ததோடு, அவர்களுக்கான சிகிச்சை சேவைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய அவசியமான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அமைச்சர், சிகிச்சை சேவைகள், அவசரத் தேவைகள் மற்றும் பிற சேவை வழங்கல் தொடர்பாக, வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை அதிகாரிகள், மருத்துவமனை நிருவாகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடனும் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தில் காயமடைந்து, தற்போது தேசிய வைத்தியசாலையில் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 29 ஆகும். அவர்களில் 15 அதிகாரிகள் மற்றும் 14 கைதிகள் அடங்குவர். இவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
