Dream Destination’ திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு.

அரச – தனியார் கூட்டுப் பங்களிப்புடன் நாடு முழுவதிலும் உள்ள 100 புகையிரத நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் Dream Destination திட்டத்தின் கீழ், வசதிகள் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (06) முற்பகல் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வையில், Clean Sri Lanka செயலகத்தினால் நிலைபேறான திட்டமாக Dream Destination வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

களனிவெளி புகையிரத பாதையின் கொட்டா வீதி மற்றும் கிருலப்பனை உப புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள நாரஹேன்பிட்டி புகையிரத நிலையம், பல வருடங்களாக புனரமைக்கப்படாததன் காரணமாக எவ்வித வசதிகளுமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது. அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் அமைந்துள்ள நாரஹேன்பிட்டி பிரதேசத்திற்கு, இந்த புகையிரத நிலையத்தின் ஊடாகவே பெருமளவிலான மக்கள் தமது போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அதன்படி,Clean Sri Lanka செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ‘MAGA Engineering (Pvt.) Ltd.’ நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்மாணப் பங்களிப்புடனும், ‘NIO Engineering’ தொழில்நுட்ப மற்றும் சேவை வழங்கலுடனும் இந்தத் திட்டத்தின் நவீனமயமாக்கல் பணிகள் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. அந்த நவீனமயமாக்கல் செயன்முறையின் கீழ், புகையிரதப் பயணிகள் மேம்பாலம் புதிதாக அமைக்கப்படல், புகையிரத நிலையத்தின் கூரையை அமைத்தல், இரண்டாவது பயணிகள் மேடையை (Platform) விரிவாக்கம், சுகாதார மற்றும் கழிவுநீர்க் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், உட்புற மற்றும் வெளிப்புறங்களுக்கு வர்ணம் பூசுதல், பயணிகள் அமருவதற்கான புதிய ஆசனங்களைப் பொருத்துதல், புகையிரத உத்தியோகபூர்வ இல்லத்தைப் புனரமைத்தல், மின்விளக்கு கட்டமைப்பை நவீனமயமாக்கல் மற்றும் புகையிரத நிலைய உள்பாதையை கார்பெட் இட்டு புனரமைத்தல் உள்ளிட்ட புகையிரத நிலையம் மற்றும் அதனைச் சூழ பௌதீக புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top