
நேற்று முன்தினம் (29) காலமான அமரர் க.டெலக்சன் அவர்களின் மரண வீட்டுக்குச்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் விஜயம் செய்து, அன்னாரின் குடும்பத்தினரை நேற்று (31) சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்தார்.
இதன்போது, அன்னாரின் குடும்ப உறுப்பினர்களுடன் துயரத்தைப்பகிர்ந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், அவர்களின் இழப்பிற்கு தனது ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தார்.
அத்துடன், இக்கட்டான நேரத்தில் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையையும் பொறுமையையும் வழங்க பிரார்த்தித்தார்.
அமரர் க.டெலக்சன் அவர்கள் சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்து, உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர். வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, கடின உழைப்பின் மூலம் முன்னேற வேண்டுமென்ற இலட்சியத்துடன் வாழ்ந்தவர் எனவும் அவரது குடும்பத்தினர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கவலையைப்பகிர்ந்து கொண்டனர்.
சிறு வயதிலிருந்தே உழைப்பை மதித்து, தனது எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடன் செயற்பட்ட அவர், கல்வியில் முன்னேறி ஒரு சிறந்த நிலையை அடைய வேண்டுமென்ற கனவுகளைக் கொண்டிருந்தார் எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும், அமரர் டெலக்சன் அவர்கள் விளையாட்டுத் துறையிலும் அதிக ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞராக விளங்கியதுடன், பல போட்டிகளில் பங்கேற்று, வெளிநாடுகளுக்கும் சென்று தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான திறமையும் எதிர்காலக்கனவுகளும் கொண்ட ஒரு இளம் உயிரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் எனத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது, காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளருமான இ.எம் றுஸ்வின், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் அஷ்ஷெய்க் நப்ரீஸ் மற்றும் சகோதரர் அஸார் முகம்மட் அவர்களும் கலந்து கொண்டனர்.
