

பிறைந்துரைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கெளரவிப்பு
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட 35 மாணவர்கள், பிறைந்துரைச்சேனை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (13) மட்/மம சாதுலியா வித்தியாலய முன்றலில் கெளரவிப்பு நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது.
கடந்த 10 ஆண்டுகளாக இப்பிரதேச மாணவர்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் பிறைந்துரைச்சேனை கல்வி அபிவிருத்தி ஒன்றியம், இம்முறை வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவித்து, எதிர்கால மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களும் அதிதிகளும், சாதுலியா வித்தியாலய பேண்ட் வாத்தியக் கலைஞர் மாணவர்களின் இசை நிகழ்ச்சியுடன் சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.
பிறைந்துரைச்சேனை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் ஏ.யு.எம். நளீம் (ஸலாமி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம். தாஹிர் கலந்து கொண்டார்.
மேலும் கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.எம். மர்ஷுக், ஆசிரிய ஆலோசகர் எம்.பி.ரீ. கான், பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய அதிபர் எம்.எல். நிஜாம்தீன், அஸ்கர் மகாவித்தியாலய அதிபர் எல்.ரீ.எம். சாதிகீன், ஆசிரியர்களான எம்.என். நிஜாஸ், எம். பஹாஸ்தீன், மற்றும் புகையிரத நிலைய அதிபராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட எம்.ஏ. இம்ரான், நைட்டா நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர் ஏ.ஜி. அஸ்லம், வாழைச்சேனை அன்-நஹ்ஜா இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் நிர்வாக செயலாளர் ஸெய்னுதீன் ஹாஜியார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எப். நஸீபா ஆசிரியையாக தெரிவு செய்யப்பட்டதற்காக அவரும் சிறப்பாக கெளரவிக்கப்பட்டார். மேலும் பல சவால்களுக்கு மத்தியில் இந்நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த ஒன்றியத்தின் தலைவர் ஏ.யு.எம். நளீம் அவர்களுக்கு அதிதிகள் உரையாற்றுகையில் தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மேலும் மாணவர்கள் கெளரவிக்கப்பட்ட வேளையில் அவர்களுடன் வருகை தந்த பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
