18 வயதை எட்டியவுடன் முதலாவது இரத்ததானம் வழங்கிய சம்மாந்துறை மாணவி .

இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக, சம்மாந்துறை அல்-மர்ஜான் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது 18 ஆவது வயதைப் பூர்த்தி செய்தவுடன் முதலாவது இரத்ததானத்தை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று சம்மாந்துறையில் மாபெரும் மனிதாபிமான இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், அல்-மர்ஜான் பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி, இரத்ததானம் செய்யத் தகுதியான 18 வயதை அடையும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்து, இன்று தனது முதலாவது இரத்ததானத்தை வழங்கினார்.

மேலும், இரத்ததானத்திற்கு அவசியமான குறைந்தபட்ச 50 கிலோ உடல் எடையை எட்டிய பின்னரே ஆரோக்கியமான முறையில் இரத்ததானத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களின் பங்கேற்பு குறைவாகக் காணப்படும் இரத்ததான முகாம்களில், சமூகப் பொறுப்புணர்வுடன் முன்வந்து மனிதாபிமான சேவையில் ஈடுபட்ட இம்மாணவியை பலரும் “இளம் சிங்கப்பெண்” என பாராட்டி வருகின்றனர்.

அவரது உயரிய மனிதாபிமான செயலைக் கௌரவிக்கும் வகையில், அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவினரால் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் உயிர் காக்கும் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இம்மாணவியின் செயற்பாடு சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இளைஞர்கள் பலரையும் இரத்ததானம் செய்ய ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top