

மட்டக்களப்பில் புதிய பனை கைப்பணிப் பயிற்சி நிலையம் திறப்பு!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , மட்டக்களப்பு – கல்லடி வேலூரில் அமைக்கப்பட்ட புதிய கைப்பணிப் பயிற்சி நிலையத்தை இன்று(28) திறந்து வைத்தார்.
பனை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன், அப்பகுதிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீபாலவிநாயகர் பொதுக் கட்டடத்தில் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு பெண்களுக்குப் பனை சார்ந்த கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வின்போது, பனை கைப்பணிக் கற்கை நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த பயனாளிகளுக்குப் பிரதி அமைச்சர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை கைப்பணிப் பொருட்கள் மிகச் சிறந்த முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தியாளர்களுக்குச் சிறந்த வருமானம் கிடைக்க வேண்டும்.
அதற்காக, பனை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பனை உற்பத்திக் காட்சியறைகள் மற்றும் ‘கற்பகம்’ விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்குத் துரித நடவடிக்கை மேற்கொள்வேன்” என உறுதியளித்தார்.
மேலும், ஜனாதிபதியின் வழிகாட்டலில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் “போதையற்ற நாட்டை உருவாக்கும்” வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
மக்களின் கோரிக்கைகள்
இந்நிகழ்வில் பங்குபற்றிய பயனாளிகள், பனை மரங்களை மீள் நடுகை செய்தல், பனை சார் உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பனை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், பனை அபிவிருத்தி சபையின் பொது முகாமையாளர் எஸ். ஜசிந்தன், மாவட்ட முகாமையாளர் ரீ. விஜயன், கைப்பணி ஆசிரியர் திருமதி ராஜேந்திரம் மலர்தேவி, கிராம சேவகர், ஸ்ரீபாலவிநாயகர் அறநிலைய காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
