

காவத்தமுனையில் தாய்சேய் சிகிச்சை நிலையம் நிரந்தரக்கட்டடத்தில் திறந்து வைப்பு
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை கிராமத்தில் மிக நீண்டநாள் தேவையாகக் காணப்பட்ட தாய்சேய் சிகிச்சை நிலையம் இன்று (28/04/2025) செவ்வாய்க்கிழமை நிறந்தரக்கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், ஐ.எஸ்.ஆர்.சி நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் ஏ.எல்.ஜுனைட் நளீமி, ஓட்டமாவடி கால்நடை வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.ஹபீல், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.லத்தீப், பிரதேச சபை செயலாளர் எஸ்.ஏ.அமீர், பல் வைத்திய அதிகாரி ரீ.ஸ்ரீபதி, காகிதநர் மில்லத் வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.றிஹாஸ், கட்டிடத்திற்கான காணியை அன்பளிப்புச்செய்த எம்.எச்.எஸ்.உமர் லெப்பை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.
குவைத் நாட்டின் பைதுல் ஸக்காத் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் ஐ.எஸ்.ஆர்.சி இலங்கை நிறுவனத்தின் பங்களிப்பில் இக்கட்டிடமும் அதற்கான தளபாடம், மின்சாரம் என்பனவும் அமையப் பெற்றுள்ளது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்பிரிவில் குவைத் நாட்டின் பைதுல் ஸக்காத் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் ஐ.எஸ்.ஆர்.சி இலங்கை நிறுவனத்தின் பங்களிப்பில் அமையப்பெற்ற மூன்றாவது தாய்சேய் சிகிச்சை நிலையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
