

ஏறாவூரில் தேசிய மருந்தக விழிப்புணர்வு செயற்திட்டம்.
“கிளீன் சிறிலங்கா ” மற்றும் “ரட்டம எகட்ட ” தேசிய திட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை மையப்படுத்திய விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் எல்லைக்குட்பட்ட தனியார் மருந்தகங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஊட்டும் வேலைத்திட்டம் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சாபிறா வசீம் தலைமையில் திங்கள்கிழமை (27)அன்று இடம்பெற்றது .
விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,
ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் ,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார பணிமனையின் உத்தியோகத்தர்கள் என பலர் பங்கேற்று இருந்தனர் .
இதன்போது விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டதுடன்,மருந்தகங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
வைத்தியரின் சிபாரிசு இன்றி (மருந்துச் சிட்டு) இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டாம் என மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தலும் இதன்போது வழங்கப்பட்டது .
மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் இவ்வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
