உத்தேச புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் விசேட கூட்டமொன்று, தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.


தற்போதைய மற்றும் எதிர்கால உலகத் தொழிற் சந்தைக்கு ஏற்ற வகையில் இலங்கையின் தொழிலாளர் சட்டக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டு வரும் உத்தேச புதிய தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. தற்போது நடைமுறையிலுள்ள பிரதான தொழிலாளர் சட்டங்களை ஆராய்ந்து, அவற்றை ஒருங்கிணைத்து புதிய சட்டக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இதன் நோக்கமென அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தினர்.
