

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதையும், அவர்களது தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட சிறுதொழில் முயற்சியாண்மைக் கண்காட்சி 2026 பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்று வருகிறது.
நவம்பர் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 50 இற்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது அவர்களால் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், வீட்டுத் தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துதல், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுத்தல் ஆகிய நோக்கங்களுடன் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.
