கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகம் மீராவோடை ஜும்ஆப்பள்ளிவாயல் மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய இரத்த தான முகாம் 12.05.2026ம் திகதி திங்கட்கிழமை அன்று காலை 8 மணி முதல் 5 மணி வரை மீராவோடை ஜும் ஆப்பள்ளிவாயலில் இடம்பெற்றது.


வைத்தியசாலைகளில் நிலவும் குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எம்.றிஸ்வின் அவர்களின் வழிகாட்டலில் பிரதித்தலைவர் ஏ.எல்.சதாம் தலைமையில் பள்ளிவாயல் நிருவாகிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இவ்விரத்த தான முகாமில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.
இதன் போது, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.எஸ்.பி.சஞ்சீவ, வாகரை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி சமிந்த சமரகோன் GOC, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு வைத்தியர் Dr விருஷ், பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி சஸ்னா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இரத்த தான முகாம் சிறப்பான முறையில் நடந்தேற ஒத்துழைத்த மீராவோடை ஜும்ஆப்பள்ளிவாயல் நிருவாகத்தினர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி ஊழியர்கள், சிலோன் கெம்பஸ் நிருவாகத்தினர், மாணவர்கள் மற்றும் குருத்திக்கொடை வழங்கியோர், ஒத்துழைத்த புனாணை இராணுவத்துனர், கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக நிருவாகிகள், வீரர்கள், நலன்விரும்பிகளுக்கும் கழகத்தின் சார்பில் பிரதித்தலைவர் ஏ.எல்.சதாம் நன்றி தெரிவிக்கின்றார்.
