

மட்டக்களப்பு ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக இன்று (14) வருகை தந்தனர்.
ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தும் ‘Vision’ திட்டத் தொடருக்கு அமைவாகவே இப்பாடசாலைக்கு இச்சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. ஜனாதிபதி செயலக பழைய பாராளுமன்றக் கட்டிடத்தைப் பார்வையிட்ட பின்னர், பாராளுமன்ற வரலாறு குறித்து மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன் போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சமூதாயத்திற்கு தலைமை தாங்கும், உலகை மாற்றுவதில் கவனம் செலுத்தும் ஓர் எதிர்காலச் சந்ததியை உருவாக்குவது காலத்தின் தேவையாகும் என்று தெரிவித்தார்.
உலகின் அறிவாற்றலை கையகப்படுத்துவதற்கு எதிர்காலப் பிள்ளைகளைத் தயார்படுத்துவதுடன், நாட்டிற்குப் பயனுள்ள தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
