

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் எம்.எம். ஹலால்தீனின் ஒரு வருட சேவை நிறைவை முன்னிட்டு மனிதநேயப் பணி முன்னெடுப்பு!
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம். ஹலால்தீன் அவர்கள் தவிசாளராகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைவதை முன்னிட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டமாவடி மஜ்மா நகர் கொவிட்–19 மையவாடியில் மாபெரும் சிரமதான நிகழ்வு நேற்று (08.11.2026) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சிரமதானப் பணியில், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ஜனாஸா நலன்புரி அமைப்புகள், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புகள், மத்ரஸா மாணவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
கொவிட்–19 பெருந்தொற்றுக் காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு, இலங்கை வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இம்மையவாடியின் தூய்மையையும் கண்ணியத்தையும் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
தவிசாளரின் ஒரு வருட சேவை நிறைவை வெறுமனே கொண்டாட்ட நிகழ்வாக முன்னெடுக்காமல், சமூகத்திற்குப் பயனளிக்கும் மனிதநேயப் பணியாக முன்னெடுத்தமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இச்சிரமதான நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான கே.பி.எஸ். ஹமீட், எம்.ரீ.எம். அன்வர், ஏ.ஜி. அமீர், என்.எம். பாஹிர், எம். அலி அன்சார், எம். மீராசாஹிப் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் எம்.ஏ.சி.எம். நியாஸ் ஹாஜியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், அகில இலங்கை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எம். காதர் சேர் தலைமையிலான உறுப்பினர்கள், கொழும்பு பொது வைத்தியசாலையைச் சேர்ந்த பௌமி ஹாஜியார், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நிலாம், றாகம ஜனாஸா அமைப்பின் எம். நிஜாம் ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும், பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் சிக்கந்தர் ஹாஜியார் தலைமையிலான குழுவினர், பர்ஸான் ஜனாஸா மற்றும் அவசர உதவி சேவை அமைப்பின் தலைவர் எம். றியாத் ஹாஜியார் தலைமையிலான உறுப்பினர்கள், மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை அமைப்பின் எம்.எம். முபாரக் ஹாஜியார் தலைமையிலான குழுவினர் ஆகியோரும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.
கல்குடா ஜனாஸா சேவை அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகருமான ஏ.எல். நௌபர், ஏறாவூர் மற்றும் நிந்தவூர் ஜனாஸா சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட கொழும்பு, கண்டி, கல்குடா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜனாஸா நலன்புரி மற்றும் அனர்த்த அவசர உதவி அமைப்புகளின் பிரதிநிதிகளும் தமது பங்களிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் சிறாஜியா அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ரப் மௌலவி தலைமையிலான மாணவர்கள், நஹ்ஜியா அரபுக் கல்லூரியின் அதிபர் எம். அப்துல்லாஹ் மௌலவி தலைமையிலான உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள், ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொருளாளர் ஏ. இல்யாஸ் கபூரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதேவேளை, ஆட்டோ சங்கத்தின் தலைவர் எம். பௌர்தீன் தலைமையிலான உறுப்பினர்கள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும், பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன், முன்னாள் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ. அக்பர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள், இலங்கை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இச்சிரமதானப் பணியில் இணைந்துகொண்டனர்.
இதன்போது, மையவாடி வளாகத்தில் காணப்பட்ட பற்றைகள், தேவையற்ற தாவரங்கள், குப்பைகள் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மைக்குத் தடையாக இருந்த பொருட்கள் அகற்றப்பட்டு, வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த ஜனாஸா நலன்புரி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், மத்ரஸா மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்றியமை இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை மேலும் உணர்த்தியது.
தவிசாளர் எம்.எம். ஹலால்தீன் உரை
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம். ஹலால்தீன், கொவிட்–19 பெருந்தொற்றுக் காலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட துயரங்களையும், உயிரிழந்த தமது உறவினர்களின் ஜனாஸாக்களை மத வழிமுறைகளுக்கு அமைவாக நல்லடக்கம் செய்ய முடியாமல் குடும்பங்கள் அனுபவித்த வேதனைகளையும் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்.
அக்காலப்பகுதியில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் எதிர்கொண்ட மனவேதனைகள், ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சவால்கள் மற்றும் பொருத்தமான நல்லடக்க இடத்தை அடையாளம் காண்பதில் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்கிய ஓட்டமாவடி பிரதேசத்தின் பங்களிப்பு மனிதநேய வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஜனாஸா நல்லடக்கத்திற்காகத் தங்களால் பராமரிக்கப்பட்டு வந்த காணியை எவ்வித தயக்கமுமின்றி, பெருந்தன்மையுடனும் மனமுவந்தும் வழங்கிய சகோதரர்களின் தியாகம் அளப்பரியது எனத் தெரிவித்த அவர், தனிப்பட்ட நலன்களைவிட மனிதநேயத்திற்கும் சமூகத்தின் தேவைக்கும் முன்னுரிமை வழங்கிய அவர்களது தன்னலமற்ற செயற்பாடு என்றும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியது எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், கொவிட்–19 தொற்றுநோய் தொடர்பான அச்சமும் உயிராபத்தும் நிலவிய காலகட்டத்தில், தமது உயிரையும் பொருட்படுத்தாமல் ஜனாஸா நல்லடக்கப் பணிகளில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினர், பிரதேச சபை ஊழியர்கள், தன்னார்வலர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சேவையாளர்களின் மகத்தான பங்களிப்புகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
ஓட்டமாவடி கொவிட்–19 மையவாடி என்பது உயிரிழந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓர் இடம் மாத்திரமல்ல; மாறாக, மனிதநேயம், சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், தியாகம் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றை நினைவூட்டும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாத்து, அவற்றின் தூய்மையையும் கண்ணியத்தையும் பேணுவதுடன், அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் முக்கியத்துவத்தையும் எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துரைப்பது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் எனவும் தவிசாளர் எம்.எம். ஹலால்தீன் தெரிவித்தார்.
தவிசாளரின் ஒரு வருட சேவை நிறைவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இம்மாபெரும் சிரமதானப் பணி, அரச நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்தால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
