


தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் விசேட மெச்சுரை மற்றும் மெச்சுரை விருதுகளைப் பெற்றுக்கொண்ட வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த 247 நிறுவனங்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (27.10.2026) கிளிநொச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க அபயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் 2025/2026ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது, நாடு முழுவதிலுமிருந்து 6,600-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 2,800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.
முதற்கட்டத் தெரிவின் பின்னர், 2,056 நிறுவனங்கள் களவிஜயம் ஊடாக நேரடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவ்வாய்வுகளின் அடிப்படையில், 1,669 நிறுவனங்கள் விருதுகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்டன.
தேசிய ரீதியில், ஆறு நிறுவனங்கள் தங்க விருதையும், 12 நிறுவனங்கள் முதலாமிடத்தையும், 99 நிறுவனங்கள் இரண்டாமிடத்தையும், 331 நிறுவனங்கள் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்றன.
மேலும், 568 நிறுவனங்கள் விசேட மெச்சுரை விருதையும் (Special Commendation), 653 நிறுவனங்கள் மெச்சுரை விருதையும் (Commendation) பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்படி விருதுகளுக்காக 107 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த 247 நிறுவனங்கள் கௌரவிப்பு :
தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த நிறுவனங்களில் விசேட மெச்சுரை மற்றும் மெச்சுரை விருதுகளைப் பெற்றுக்கொள்ளத் தெரிவுசெய்யப்பட்ட 247 நிறுவனங்களுக்கான விருதுகள் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.
ஊர்காவற்றுறை, கோப்பாய், பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்களுக்கு விசேட மெச்சுரை வழங்கப்பட்டுள்ள மை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், வடமத்திய மாகாணத்தின் பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரி அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
